சென்னை, நவ.4: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாதென சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடந்த உண்மையை கண்டறிய குழு அமைக்க வேண்டும்; பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் புகார் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம், வழக்கறிஞர்கள் சாந்தகுமாரி, ஆர். சுதா உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் இறுதி அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சரவணன் ஆகியோர் கொண்ட பெஞ்சில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இச்சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை ரகசியமாக நடந்து வருவதால், இறுதி அறிக்கையை அம்பலப்படுத்தும் வகையில் மனுதாரர்களுக்கு வழங்க முடியாது என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் மேற்பார்வையிடுவதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை. விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்கு உதவ, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் அணுக வேண்டும். கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை, கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டிருப்பார்கள் என தெளிவுபடுத்தினார். இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணைக்கு உதவும் வகையில், தங்களிடம் உள்ள ஆதாரங்களை சிபிஐ புலன் விசாரணை அதிகாரியிடம் மனுதாரர்கள் வழங்க வேண்டும். வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 3- ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.