சென்னை, நவ,4: காரில் வந்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பொறியியல் கல்லூரி மாணவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- நொளம்பூரில் சப் இன்ஸ்பெக்டர் லூர்துமேரி தலைமையில் நேற்று போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது யூனியன் சாலையில் நாகாத்தம்மன் கோயில் அருகே ஒரு கார் நின்று கொண்டிருந்ததை கவனித்தனர். அருகில் சென்று பார்த்த போது காரில் 4 இளைஞர்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

இதையடுத்து காரில் சோதனை நடத்தியதில் 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக காரில் இருந்த அப்துல் ரசாக் (வயது 20) கைது செய்யப்பட்டார். இவர¢மதுரவாயலில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக் 4-வது ஆண்டு படித்து வருகிறார். மேலும் முகமது சித்திக் (வயது 19) என்பவரும் கைதானார். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவரான இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 2-வது ஆண்டு வருகிறார். 3-வதாக கைதான சதீஷ்குமார் (வயது 24). பெரிய மேட்டை சேர்ந்தவர்.

இவர் மதுரையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இ.இ.இ படித்து வருகிறார். 4-வதாக கைதான அன்சாரி மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேரும் அவ்வப்போது காரில் கஞ்சாவுடன் வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக கார் பறிமுதல் செய்யப்பட்டது. பொறியியல் படிக்கும் மாணவர்கள் இதுபோன்ற சட்ட செயலில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.