சென்னை, நவ.4: நீட் தேர்வில் பல்வேறு குழப்பங்கள் இருந்தும் அதை திரும்பப் பெறாதது ஏன் என்று மத்திய அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி விடுத்துள்ளது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடரபான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோரை கொண்ட அமர்வு முன் சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வக்கீல் விசாரணையின் விவரங்களை எடுத்து கூறினார். இந்த வழக்கில் மாணவர்களின் கைரேகை பதிவு இன்று சிபிஐசிஐடி போலீசிடம் தேர்வுகள் முகமை ஒப்படைக்க இருக்கம் தகவலும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆள் மாறாட்டம் தொடர்பாக நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இது குறித்து ஏற்கனவே புகார் செய்யப்பட்டிருக்கிறதா? தேர்வுகள் முகமை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேட்டனர்.

இவ்வளவு குழப்பங்கள் நீட் தேர்வை மத்திய அரசு திரும்ப பெறாதது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்றால் காங்கிரசின் திட்டங்கள் வாபஸ் பெறப்படும் போது நீட் தேர்வையும் திரும்ப பெறாதது ஏன் என்பது பற்றி கேள்விகள் எழுப்பினர்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை 7-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆள்மாறாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட திருப்பத்தூரை சேர்ந்த மாணவன் முகமது இர்பானின் தந்தை முகமது சபியின் ஜாமின் மனுவும் ஐகோர்ட்டில் இன்று நிராகரிக்கப்பட்டது. மாணவன் இர்பானுக்கு ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.