தூத்துக்குடியில் 3 ஆரம்ப சுகாதார மையம் துவக்கம்

சென்னை

சென்னை, நவ.4: ஏஎம் ஃபவுண்டேஷன் சார்பில் தூத்துக்குடியில் 3 ஆரம்ப சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கிவரும் ஏஎம் இன்டர்நேஷனலின் கார்ப்பரேட் சமூக பொறுப்புறுதி செயல்பாட்டுப் பிரிவான (சிஎஸ்ஆர்) ஏஎம் ஃபவுண்டேஷன், தூத்துக்குடிக்கு அருகே உள்ள அபிராமிநகர் மற்றும் மறவன் மடம் என்ற கிராமங்களில் இரு ஆரம்ப சுகாதார மையங்களை சமீபத்தில் தொடங்கியிருக்கிறது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கிரீன்ஸ்டார் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை அமைந்திருக்கும் தூத்துக்குடி நகருக்கு வெளியே இந்த கிராமங்கள் இருக்கின்றன.

இந்த இரு சுகாதார மையங்கள் மட்டுமன்றி, பயன்படுத்தப்பட்ட ஒரு கன்டெய்னரை சீரமைத்து, சுகாதார பராமரிப்பு மையமாக மாற்றி அதனை தூத்துக்குடி மாநகராட்சிக்கு ஏஎம் ஃபவுண்டேஷன் வழங்கியிருக்கிறது. இந்த மையங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் வசிக்கின்ற 10,000-க்கும் அதிகமான உள்ளூர் மக்களுக்கு கிரீன்ஸ்டார் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் – ன் சிஎஸ்ஆர் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த முனைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஏஎம் இன்டர்நேஷனல் குழுமத்தின் தலைவர் அஸ்வின் முத்தையா, குழுமத்தின் இயக்குனர் வள்ளி அஸ்வின் முத்தையா, புரவலர் அழகு அஸ்வின் முத்தையா, ஆலோசகர். டேவிட் ரிச்சர்ட்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர். மேலும் ஜிஎஃப்எல் – ன் தாய் நிறுவனமான சதர்ன் ஃபெட்ரோகெமிக்கல்ஸ் இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷனின் முழுநேர இயக்குனர் எஸ்.ஆர். ராமகிருஷணன், தலைமை இயக்க அதிகாரி பாலு, உதவி துணை தலைவர் கே. கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.