மும்பை, நவ.5: மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பிஜேபி, சிவசேனா கூட்டணியில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதலால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வர் ஆக 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக அக்கட்சி பிஜேபியை மிரட்டி வருகிறது. இதனால் மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்கும் எனகூறப்பட்டது. தேசியவாத காங்கிரசின் தலைவரான சரத்பவார், நேற்று டெல்லியில் காங்கிரசின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது மகாராஷ்டிராவில் சிவசேனாவை ஆதரிக்க சோனியா காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. சிவசேனா-பிஜேபி மோதல் என்பது அவர்களது கூட்டணியின் உள்விவகாரம், சிவசேனா எங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. ஆட்சி அமைக்க எங்களிடம் தேவையான எம்எல்ஏக்கள் இல்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயாராக இருக்கிறோம் என கூறினார்.

இந்த நிலையில், மும்பையில் உள்ள கவர்னர் மாளிகையில் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி., மந்திரி ராம்தாஸ் கதம் ஆகியோர் கவர்னரை சந்தித்து பேசிவிட்டு திரும்பிய போது சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சிவசேனாவில் இருந்தே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக வருவார். மகாராஷ்டிராவின் தோற்றம் மற்றும் அரசியல் உருமாறி வருகிறது. அதனை நீங்கள் காண்பீர்கள் என்றார்.