ஈரோடு, நவ.5: ‘மணியடிச்சா சோறு தரும் மாமியாரு வீடு’ என்று சிறைவாசம் பற்றி வேடிக்கையாக குறிப்பிடுவது உண்டு. ஆனால் ஒரு வாலிபர் இருக்க இடம் இல்லாமல், உண்ண உணவில்லாமல் சிறையே சொர்க்கம் என்று திருட்டை நடத்தி நிஜமாகவே சிறைக்கு சென்றிருக்கிறார். அண்மையில் ஈரோடு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இரண்டு மர்ம அலைபேசி அழைப்புகள் வந்தன. ஒன்று ஈரோடு ரெயில்நிலையத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்பது. அடுத்ததாக ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று மற்றொரு அலைபேசி காவல்துறையை அலற வைத்தது. இரண்டு இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஆனால் அவை போலி என தெரியவந்தது.

இதனிடையே போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடிவந்தார்கள். அந்த தொலைபேசி எண் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். தன்னுடைய அலைபேசியை தனது மைத்துனர் லிங்கராஜிடம் கொடுத்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார். லிங்கராஜை பிடித்து விசாரித்த போது தனது அலைபேசி திருட்டு போனதாக கூறியிருக்கிறார். இதனிடையே ஈரோடு ரெயில் நிலையத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் மர்ம அழைப்புகள் வந்த அலைபேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

பிடிபட்ட வாலிபரின் பெயர் சந்தோஷ் குமார். மேட்டுப்பாளையத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள். என்ன காரணத்தினாலோ இரண்டு மனைவிகளும் அவரை கைகழுவிவிட்டார்கள். மேட்டுப்பாளையத்தில் தான் பார்த்த வேலையும் அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் வேலை தேடி ஈரோடுக்கு சென்றார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. தங்குவதற்கு இடமும் இல்லை. இதனால் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். அப்போதுதான் அவருக்கு ‘மாமியார் வீடு’ பற்றி ஞாபகம் வந்தது. மணியடித்தால் சாப்பாடு, தங்குவதற்கு இடம் கிடைக்கும் என்று திட்டமிட்டார்.