அங்காரா, நவ.5: ஐ.எஸ். பயங்கரவாத குழு தலைவரான கொல்லப்பட்ட அல் பாக்தாதியின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார். சிரியாவின் வடமேற்கே இத்லிப்பில் பதுங்கி இருந்த அல் பாக்தாதி அமெரிக்காவால் கொல்லப்பட்டு உள்ளார். அல் பாக்தாதி கொல்லப்பட்ட தகவலை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்ததுடன், உலகம் இனி பாதுகாப்புடன் இருக்கும் என்றும் கூறினார். இந்நிலையில், அல் பாக்தாதியின் மூத்த சகோதரி ராஸ்மியா (வயது 65) கைது செய்யப்பட்டு உள்ளார் என்ற தகவலை துருக்கி அரசு தெரிவித்து உள்ளது.

வட சிரியாவின் அலெப்போ பகுதியில் அஜாஸ் நகரில் நேற்று மாலை தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக வசித்து வந்த ராஸ்மியாவை துருக்கிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்க கூடும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு ரகசிய தகவல்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.