சென்னை, நவ. 5: தமிழ்நாட்டின் மிகவும் போற்றப்பட்ட காந்தியவாதி விருதை தமிழகத்தைச் சேர்ந்த 4 பிரபலங்களுக்கு போர்டிஸ் மலர் மருத்துவமனையும், மூத்த குடிமக்கள் குழுமமும் இணைந்து வழங்கி கவுரவித்தது. தனி நபர்களின் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை பெசன்ட் நகர் மூத்த குடிமக்கள் குழுமத்துடன் இணைத்து போர்டிஸ் மலர் மருத்துவமனை இந்த ஆண்டு துவங்கியுள்ளது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை நினைவுகூறும் விதமாகவும், உண்மை, நேர்மை, நெறிமுறைகள் மற்றும் இரக்கம் ஆகிய காந்திய சிந்தனைகளை பரப்புவதற்காகவும் போர்டிஸ் மலர் மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் 4 பேரும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இந்த விருது, இந்திய பசுமை புரட்சிக்கு வித்திட்ட விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா, இந்திய முன்னாள¢தலைமை தேர்தல் அதிகாரி டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் சங்கர நேத்ராலயா அகாடமி நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்,பத்ரிநாத் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுகளை போர்டிஸ் மலர் மருத்துவமனையின் இயக்குனர் நாகேஸ்வரன், பெசன்ட் நகர் மூத்த குடிமக்கள் குழுமத்தின் தலைவர் சந்திரசேகர் மற்றும் போர்டிஸ் மலர் மருத்துவமனையின் இருதயவியல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் பிரதீப் நாயர் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் போர்டிஸ் மலர் மருத்துவமனை இயக்குனர் நாகேஸ்வரன் பேசுகையில், இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாங்கள் இணைந்திருப்பதற்காக மிகவும் பெருமைப்படுகிறோம். விருது பெற்ற அனைவருமே தங்களது துறையில் சிறப்பான முன்னோடிகளாகவும், சமூகத்திற்கு உத்வேகமாகவும் இருந்துள்ளனர். இந்த விருது அவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கிறது. மேலும் இதுபோன்ற தன்னலமற்ற சேவையை செய்ய மற்றவர்களை இந்த விருது ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.