புதுடெல்லி, நவ.5: கூடம்குளம் அணுமின்நிலைய கணினி அமைப்பின் மீது வடகொரியாவில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது என்பதை தென்கொரியா உளவு அமைப்பு ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடம்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தின் கணினி கட்டமைப்பின் மீது ‘மால்வேர் அட்டாக்‘ எனப்படும் சைபர் தாக்குதல் கடந்த வாரம் நடத்தப்பட்டதாக செய்தி வெளியானது. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் நிர்வாக கட்டமைப்பு முடங்கியது. இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வடகொரியாவில் இருந்து ரகசிய தகவல்களை திருடுவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. என்பதற்கான ஆதாரங்களை தென்கொரியாவின் உளவு அமைப்பு ஆன்லைனில் பகிர்ந்துள்ளது.

அணுமின்நிலையம் மட்டுமின்றி முன்னாள் அணுசக்தி துறை தலைவர்கள் அனில் ககோதார், எஸ்.ஏ.பரத்வாஜ் உள்ளிட்ட அணுசக்தி விஞ்ஞானிகளிடம் இருந்து தகவல்களை திருடுவதற்காகவும் இ.மெயில் வாயிலாக ஊடுருவல் நடந்திருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அணுசக்தி துறையின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் கூறுகையில், தென்கொரியாவின் இந்த தகவல்கள் உண்மையானதா என்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். ககோதார் கூறுகையில், டுவிட்டுகளில் பதிவிட்டு இருப்பததை நான் முழுமையாக பார்த்தபிறகு பதில் கூறுகிறேன் என்றார். வடகொரியாவின் கிம்சுல்கி என்ற குழுமம் இந்தியாவின் அணு உலைகளின் கனநீர் வடிவமைப்பு பற்றிய தகவல்களை திருடுவதற்காக இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்றும் அணுசக்தி துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.