சென்னை, நவ.6: முகேஷ் என்ற மாணவனை துப்பாக்கியால் சுட்ட விஜய் இன்று காலை செங்கல்பட்டு கோர்ட்டில் சரணடைந்தார். சென்னை அடுத்த வண்டலூர் அருகேயுள்ள வேங்கடமங்கலம் ஊராட்சி பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஷோபா தனது கணவர் இறந்து விட்ட நிலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு தனது மகன் முகேஷ் மற்றும் லோகேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். முகேஷ் ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் ட்ரிப்பிள் ஈ முதலாம் ஆண்டு பயின்று வந்தான்.
இந்நிலையில் வழக்கம் போல் முகேஷ் அதே வேங்கடமங்கலம் பார்கவி அவன்யூவில் உள்ள தனது நண்பர் விஜய் வீட்டிற்கு சென்று வீட்டினுள் அறையில் அமர்ந்து பேசிகொண்டிருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால் விஜய்யின் தம்பி உதயா மட்டும் வெளியே அமர்ந்திருந்த போது திடீரென வெடிக்கும் சத்தம் கேட்டு உள்ளே ஓடி பார்த்துள்ளார்.

அப்போது முகேஷ் நெற்றியில் குண்டு துளைத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனே கையில் துப்பாக்கி வைத்திருந்த விஜய் தம்பியை கண்டதும் தப்பி ஓடியுள்ளார். பின்னர் விஜயின் தம்பி உதயா அளித்த தகவலின் பேரில் அக்கம்பக்கத்தினர் மற்றும் தாழம்பூர் போலீசார் சம்பவ இடம் வந்து முகேஷை மீட்டு இரண்டு தனியார் மருத்துவமனை கொண்டு சென்று பின்னர் உயர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி முகேஷ்; உயிரிழந்தார் பின்னர் தகவலறிந்து காஞ்சிபுரம் காவல்துறை கண்கானிப்பாளர், துனை கண்கானிப்பாளர் உள்ளிட்டோர் சுமார் 50 போலீசாருடன் வேங்கடமங்கலம் ஊராட்சியிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் தப்பி சென்ற விஜய்யை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை செங்கல்பட்டில் உள்ள கோர்ட்டில் விஜய் சரணடைந்தார். மாணவன் விஜய்யிடம் துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.