புதுடெல்லி, நவ.6: புதுடெல்லியில் பிரதமர் மோடியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று காலை சந்தித்து பேசினார். பிஜேபியுடன் தமாகாவை இணைக்கக் கூடும் என்றும், மாநில பிஜேபி தலைவராக ஜி.கே.வாசன் நியமிக்கப்படலாம் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஆனால் இணைப்பு என்று வந்துள்ள செய்திகள் வதந்தியே என்று ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரதமரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் த.மா.கா. தமிழகத்தில் அ.தி.மு.க.-பிஜேபி கூட்டணியில் சேர்ந்து தஞ்சை தொகுதியில் போட்டியிட்டது.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அ.தி.மு.க., பிஜேபி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதன் பிறகு நடந்த இடைத்தேர்தல்களிலும் இந்த கூட்டணியை ஆதரித்தார். தொடர்ந்து பிரதமர் மோடியையும், மத்திய அரசு திட்டங்களையும், தமிழக அரசையும் ஆதரித்து வருகிறார். சமீபத்தில் சீன அதிபரை சந்திப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை ஜி.கே.வாசன் நேரில் சென்று வரவேற்றார். அப்போது தன்னை டெல்லியில் வந்து சந்திக்கும்படி மோடி அழைப்பு விடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இதற்கிடையே ஜி.கே.வாசன் தலைமையில் உள்ள தமாகாவை பிஜேபியுடன் இணைக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. தற்போது தமிழக பிஜேபியில் தலைவர் பதவி காலியாக உள்ளதால் த.மா.கா.வை பிஜேபியுடன் இணைத்து ஜி.கே.வாசனை தலைவராக்க அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஜி.கே.வாசன் இன்று காலை டெல்லி சென்றார். அவர் இன்று காலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக பிஜேபி கூட்டணியில் தமாகா முக்கிய அங்கம் வகித்தது. அகில இந்திய கூட்டணி கட்சி தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினேன். இந்த சந்திப்பு 20 நிமிடம் நடந்தது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு ஆகும். அரசியல் நிலவரம் குறித்து மோடியுடன் பேசினேன். இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் மனநிலையில், மாற்றம் ஏற்பட்டு உள்ளதை அவரிடம் எடுத்து கூறினேன். மத்திய மாநில அரசுகள் மீது நம்பிக்கை ஏற்பட்டு இருப்பதால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இருப்பதாக விளக்கினேன். நான் கூறியவற்றை பிரதமர் ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்தன்மையுடன் சிறப்போடு செயல்படும். உள்ளாட்சி தேர்தல் மூலம் நல்லாட்சி அமைய வேண்டும். பிஜேபியுடன் தமாகா இணையும் என்பது வதந்தியே.
இவ்வாறு அந்த பேட்டியில் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.