இயக்குனர் வஸந்திற்கு முதல்வர் பாராட்டு

சினிமா

நேருக்குநேர், ஆசை, சத்தம்போடாதே உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வஸந்த் தற்போது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு முன்பே உலகம் முழுவதும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. சமீபத்தில் மும்பை திரைப்பட விழாவில் சமத்துவ பாலின விருது பெற்றதுடன், சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது. அட்லாண்டா உலக திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

மேலும் ஜப்பானில் நடைபெற்ற மாபெரும் ஃபுக்குவாக்கா உலக திரைப்பட விழா மற்றும் அமெரிக்காவின் மூன்று மாகாணங்களிலும் நடைபெற்ற திரைப்படவிழாக்களிலும் இத்திரைப்படம் திரையிடபட்டதுடன் உலக திரைப்பட விழாவிலும் பங்கேற்க உள்ளது.
பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இத்திரைப்படத்தை இயக்கிய வஸந்த் சாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைத்து பாராட்டினார். அப்போது பேசிய முதல்வர், இலக்கியம் சார்ந்த ஒரு தமிழ் திரைப்படம், உலக அளவில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதன் மூலமும், விருதுகளை வென்றதன் மூலமும் தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறினார். இந்த சந்திப்பின் போது ராஜன் கண்மருத்துவமனை இயக்குனர் மோகன் ராஜன் உடனிருந்தார்.