நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ‘மாநாடு’ என்ற திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வழக்கம்போல் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு தர சிம்பு அடம்பிடித்ததால். இந்த படம் கிட்டத்தட்ட டிராப் ஆனதாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மாநாடு படத்தை மீண்டும் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கலந்துகொண்டு தனது மகன் சிம்பு இனிமேல் ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வர தான் உத்தரவாதம் தருவதாக உறுதி அளித்தார்.

சிம்புவின் தாயார் கொடுத்த உறுதி மொழியை ஏற்று ‘மாநாடு’ படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்தார். இந்த நிலையில் சிம்பு, ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்ததால் அவரை சந்தித்த சுரேஷ் காமாட்சி, ‘மாநாடு’ படம் குறித்தும் பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதை அடுத்து மீண்டும் ‘மாநாடு’ படத்தை தொடங்குவது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து விரைவில் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்வார் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.