எல்ஐசிக்கு இரு நிர்வாக இயக்குனர்கள் பதவியேற்பு

சென்னை

சென்னை, நவ.6: பொதுத்துறை நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு இரண்டு நிர்வாக இயக்குனர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். எல்ஐசி நிறுவனத்திற்கு நிர்வாக அமைப்பில் 4 நிர்வாக இயக்குனர்களும், ஒரு தலைவரும் உள்ளனர். இதில் 2 நிர்வாக இயக்குனர்களான டி.சி. சுசீல் குமார், விபின் ஆனந்த் ஆகிய இருவரும் ஏற்கனவே பதவியில் உள்ளனர். மீதி இரண்டு இடங்கள் காலியாக இருந்து வந்தது. இந்த காலி இடங்களுக்கு முகேஷ்குமார் குப்தா மற்றும் ராஜ்குமார் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். இவர்களோடு 4 நிர்வாக இயக்குனர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முகேஷ்குமார் குப்தா இதற்கு முன்பு இந்நிறுவனத்தில் செயல் இயக்குனராகவும், மண்டல மேலாளராகவும், போபாலில் உள்ள மத்திய மண்டலத்திற்கு மேலாளராகவும், நிர்வாக மேம்பாட்டு மையத்தின் இயக்குனராகவும், மும்பையில் உள்ள மேற்கு மண்டலத்திற்கு பிராந்திய மேலாளராகவும் பணியாற்றி உள்ளார். அமிர்தசரஸ் மற்றும் ஐதராபாத் நகரங்களில் மூத்த டிவிஷனல் மேலாளராக பணியாற்றி உள்ளார். ராஜ்குமார் இதற்கு முன்பு இந்நிறுவனத்தின் செயல் இயக்குனராகவும், எல்ஐசி மியூச்சுவல் பண்ட் அசட் மேனேஜ்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், போபால் மத்திய மண்டலத்தின் செயல் இயக்குனராகவும், கோரக்பூர் மற்றும் ஜெய்ப்பூர் டிவிஷன்களில் மூத்த டிவிஷனல் மேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.