புதுடெல்லி, நவ.7:கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. கோவையில் கடந்த 2010-ம் ஆண்டில் துணிக்கடை அதிபர் ஒருவரின் பத்து வயது மகள் மற்றும் ஏழு வயது மகன் ஆகியோர் பள்ளிக்கு சென்றபோது கார் டிரைவர் மோகன்ராஜ் மற்றும் அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோரால் கடத்தப்பட்டு பின்னர் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். மேலும் சிறுமியை மோகன்ராஜ், மனோகரன் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த இரட்டை கொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மோகன்ராஜ் போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்துச்செல்ல முயன்றபோது நடைபெற்ற என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இரட்டைத் தூக்கு மற்றும் மூன்று ஆயுள் தண்டனைகளை வழங்கி கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. மேல் முறையீட்டின் போது இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மனோகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தூக்குத்தண்டனை தீர்ப்பை தற்போது உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை தொடர்ந்து மனோகரன் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் மனோகரனுக்கு மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உள்ளது. மேலும் மனோகரனின் சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.