சென்னை, நவ.7: எந்த தொழிலையும் இழிவாக கருதாமல் பணியாற்றினால், அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்று மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் நடிகர் கமலஹாசன் கூறினார். சலூனில் ஒன்றரை மாதம் பணியாற்றியதையும் அவர் நினைவுக்கூர்ந்தார்.
உலக நாயகன் என ரசிகர்களால் போற்றப்படும் கமல்ஹாசன் தனது 65-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சொந்த ஊரான பரமக்குடியில் கொண்டாடினார். அங்கு நடைபெற்ற விழாவில் தனது தந்தை சீனிவாசனின் உருவச்சிலையை திறந்துவைத்து அவர் பேசியதாவது: நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் இன்று பெரும் பிரச்சனையாக இருக்கிறது. வேலை தேடி இடம்பெயர்ந்து செல்கிறார்கள். அவ்வாறு செல்பவர்களுக்கு அந்தந்த இடங்களிலேயே வேலை கிடைக்க வேண்டும்.

எந்த தொழிலையும் நாம் இழிவாக நினைக்க கூடாது. நான் சலூனில் ஒன்றரை மாதம் பணியாற்றி இருக்கிறேன். தொழில்களை மேலானது, கீழானது என்று நாம் நினைக்க கூடாது. பல்கலைக்கழகங்களால் மட்டும் வேலை வாய்ப்பை உருவாக்க முடியாது. நிறைய தொழில்களை நாமே உருவாக்க வேண்டும். நகரங்களில் முடி திருத்துபவர், பி.இ. படித்து பணியாற்றுபவர்களை விட அதிகமாக சம்பாதிக்கிறார். பி.இ. படித்தவர்கள் துப்புரவு பணி கேட்டு விண்ணப்பித்ததை கூட நாம் பார்த்தோம். பட்டாளத்தில் சேர்ந்தால் செத்து விடுவார்கள் என சில அஞ்சுகிறார்கள். சாலை விபத்தில் போர் முனையில் ஏற்படும் உயிரிழப்பை விட நூறு மடங்கு அதிகமாக நடக்கிறது. சாலை விபத்தில் இறப்பதை விட போர் முனையில் இறப்பது எவ்வளவோ மேல். தானம், இலவசம் கொடுத்தும் நாம் கெடுத்து விட்டோம். இலவசமாக பெறப்பட்ட கிரைண்டர் பழுதடைந்தால் அதை சரிசெய்வதற்கு வேறு இடத்தில் இருந்து ஆள் வரவேண்டி இருக்கிறது.

வாங்கிய 3 மாதங்களிலேயே இந்த பொருட்கள் பழுதடைந்து விடுகின்றன. இத்தகைய நிலைமை மாற, நாம் கரம்கொடுத்து வருகிறோம். நான் ஆரம்பித்த திறன்மேம்பாட்டு பயிற்சி மையம் இதற்கெல்லாம் உறுதுணையாக இருக்கும். இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.