கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு: 4 பேர் கைது

இந்தியா

பெங்களூரு, நவ.7: பணத்திற்காக கடத்தப்பட்ட வேலூர் தொழிலதிபர் கர்நாடக மாநிலத்தில் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் ஏலகிரி மலைப் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அருள் (வயது 50). இவரை நேற்று கடத்தி சென்ற மர்மநபர்கள் அவரது வீட்டுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதுபற்றி அருளின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏலகிரி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடத்தல்காரர்கள் பேசிய செல்போன் எண் பதிவான டவர் இருந்த இடத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் அருள், கர்நாடக மாநிலம் பங்காருபேட்டையில் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரை கடத்திச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.