சென்னை, நவ. 7: மாநிலத்தில் சாலைகள் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை அகற்றுவது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு மனுவில், தமிழ்நாட்டில் உள்ள சாலைகள், நடைபாதைகள், நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு அலுவலக வளாகங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை அகற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் 3,168 வழிபாட்டு தலங்கள் ஆக்கிரமித்து கட்டுப்பட்டுள்ளது.

இது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. இந்த வழிபாட்டு தலங்களை ஒரு சிலர் சுய லாபத்திற்காக ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலங்களை அகற்ற உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கான குழு ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதுபோன்ற குழுவையும் தமிழக அரசு அமைக்கவில்லை என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாரயணன், சேஷசாயி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர். பின்னர், வழக்கை டிசம்பர் 6 ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், இந்த வழக்கில் வக்பு வாரியம், கிறித்தவ பேராயங்களின் அமைப்புகளையும் பிரதிவாதிகளாக சேர்க்க உத்தரவிட்டனர் .