வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய டி20 போட்டி, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு 100-வது போட்டியாகும், இதன்மூலம், சர்வதேச டி20 தொடரின் நூறாவது போட்டியில் களமிறங்கும் முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை அவர் நிகழ்த்தவுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அறிமுகம் ஆனேன். இது நீண்டதொரு பயணம். 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் போட்டியில் நான் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளேன். இதில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன், என்றார்.

‘அணுகுமுறையில் நிச்சயம் மாற்றம் இருக்கும்’: இன்றைய போட்டி குறித்து அவர் மேலும் கூறுகையில், எங்களது பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவையில்லை. ஆனால், ஆடுகளத் தன்மையை ஆய்வு செய்து விட்டு, அதற்கு ஏற்ப ஒரு அணியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். ராஜ்கோட் ஆடுகளம், டெல்லியை விட சிறந்த ஆடுகளமாக இருக்கும்.ஆட்ட வியூகம் குறித்து உங்களிடம் சொல்ல முடியாது. ஆனால், நிச்சயம் எங்களது அணுகுமுறையில் மாற்றம் இருக்கும். அதை நீங்கள் பார்ப்பீர்கள். கடந்த ஆட்டத்தில் செய்த தவறுகள் மீண்டும் நடக்காதவாறு பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துகிறோம், என்றார்.