மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் லட்டு பிரசாதம் முதல்வர் துவக்கி வைத்தார்

TOP-1 சென்னை முக்கிய செய்தி

சென்னை, நவ.8: புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்
மேலும் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கோயில்களில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை அவர் திறந்துவைத்தார் புகழ்பெற்ற திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கப்படுகிறது. இதுபோல தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்க திட்டமிடப்பட்டது.

தமிழ்ப் பண்பாட்டின் பெட்டகமாகவும், ஆன்மீகத்தின் இருப்பிடமாகவும், கலைத்திறனின் நிலைக் களமாகவும் விளங்குகின்ற திருக்கோயில்களின் சொத்துக்களைப் பாதுகாத்து பராமரிப்பது, அன்றாட பூஜைகள் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்வது, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்ற பணிகளை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை மூலமாக முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வருடந்தோறும், நாள் முழுவதும் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

மேலும், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், இரத்தினகிரி, அருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலில் 4,116 சதுர அடி பரப்பளவில், 74 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி, அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக 2,930 சதுர அடி பரப்பளவில் 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 150 நபர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் கூடம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், பீர்க்கன்காரணை, அருள்மிகு சூராத்தம்மன் திருக்கோயிலில் 4,381 சதுர அடி பரப்பளவில், 64 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 500 நபர்கள் கலந்துகொள்ளும் வகையில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம், என மொத்தம் 2 கோடியே 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத் துறையில், நிலை-3 செயல் அலுவலர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட 96 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சேவூர் எஸ்.இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அஷோக் டோங்ரே, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.