சென்னை, நவ.8: திருவள்ளுவர் சிலையை போல எனக்கும் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. அதில் நான் சிக்க மாட்டேன் என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தில் நடந்த இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.

பிஜேபி அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்தது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் நாத்திகர் அல்ல, அவர் ஆத்திகர் என்பதை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. அவர் ஒரு ஞானி. பிஜேபி அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் ஊரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு எல்லாம் காவி உடை அணிவிக்க கூடாது. திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது, சர்ச்சையாக்குவது தேவையற்றது.

நாட்டில் மக்கள் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கும் போது இதைப்பற்றி இவ்வளவு சர்ச்சையாக்குவது தேவையற்றது. திருவள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூச முயற்சி நடந்தது போல, எனக்கும் சிலர் காவி சாயம் பூச முயற்சிக்கின்றனர். அதில் திருவள்ளுவரும் சிக்கமாட்டார், நானும் சிக்க மாட்டேன். எனக்கு காவி சாயம் பூச முடியாது என்று கூறினார்.
தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்றும் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வரை திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அவர் கூறினார்.

அயோத்தி தீர்ப்பு வரும் போது அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பொன்னார் சந்திப்பு குறித்து கேட்ட போது, பிஜேபியில் சேர தன்னை யாரும் அழைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். தனக்கு மத்திய அரசு சிறப்பு விருது அளித்திருப்பதற்கு அவர் நன்றி தெரிவித்தார்.