சென்னை, நவ.8: அயோத்தி தொடர்பான தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், தலைமை செயலகத்தில் இருசக்கர வாகனங்கள், கார்கள் நுழைய வரும் 13-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது என்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. நவ., 13 முதல் நவ.,15 க்குள் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பை தீவிரப்படுத்தும் படியும், மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் படியும் மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அயோத்தியில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது, உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதை அடுத்து உ.பி., மாநில தலைமை செயலாளர், டிஜிபி, மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை அழைத்து தலைமை நீதிபதி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அயோத்தியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்ட-ஒழுங்கு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக கடந்த வாரம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள் இருசக்கர வாகனங்கள், அரசு அதிகாரிகளின் கார்கள் தவிர்த்து தனியார் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வரும் 13-ம் தேதி வரை உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.