சென்னை, நவ.8: டெல்லியைவிட சென்னையில் நேற்றும் இன்றும் காற்று மாசு அதிகரித்தது. வேளச்சேரி, ராமாபுரம், அண்ணாநகரில், காற்று குறியீட்டு எண்.344 ஆக அதிகரித்தது என தனியார் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் டெல்லியில் 254ஐ தாண்டவில்லை. தலைநகர் டெல்லியில் பல்வேறு காரணங்களால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே காற்று மாசு ஆபத்தான நிலையை அடைந்தது. தரக்குறியீட்டு எண்.254 ஐ தாண்டியதால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலைமை சென்னையில் ஏற்படாது என்றும் காற்று மாசு இங்கு பரவுவதற்க வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் வடகிழக்கு பருவமழையின் இடைவெளி மற்றும் காற்றின் தாக்கத்தை பயன்படுத்தி சென்னையில் காற்று மாசு டெல்லியை விட அதிகரித்து இருப்பதாக ‘ஏர்வேடா காம்‘ என்ற தனியார் வலைதளம் தெரிவித்துள்ளது.
சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று காற்றின் தரகுறியீடு 264 ஆக இருந்தது என்றும் டெல்லியில் இது 254 ஆகவே இருந்தது என இந்த வலைதளம் கூறுகிறது. மேலும் வேளச்சேரி, ராமாபுரம், அண்ணாநகரில் இது 341 ஆகவும் மணலியில் 320 ஆகவும் இருந்தது என ஏர்வேட வலைதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆலந்தூர் மற்றும் வேளச்சேரியின் குடியிருப்பு பகுதிகளின் தரக்குறியீட்டு எண்.273க்குள் இருந்துள்ளது. வழக்கமாக 51 முதல் 100க்குள் இருந்தால் தான் காற்றின் தரம் திருப்தியானது என்று தேசிய காற்று தர காட்டுப்பாடு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு குடியிருப்பு வாசிகள் காற்றின் தரம் மோசமடைந்து இருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் குறித்து நூல்கள் எழுதியுள்ள சுற்றுச்சூழல் நிபுணர் பல்லவி ஐயர் தொலைப்பேசி வாயிலாக பேசியபோது மாசுக்கட்டுபாடு வாரியத்தின் அதிக ஊழியர்களை நியமிக்க வேண்டும். உள்ளூரின் சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்துவதற்காக கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமல்படுத்த வேண்டும் பொது போக்குவரத்து அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.