குழந்தைகள் பாதுகாப்புக்கு குழு முதலமைச்சரிடம் லதா ரஜினிகாந்த் கோரிக்கை

TOP-6 சென்னை முக்கிய செய்தி

சென்னை,நவ.8: குழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. இருந்தபோதிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், இதிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ மாநில அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களுக்கு லதா ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது: குழந்தை சுஜித் விவகாரம் தொடர்பாக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டது. ஆழ்துளை கிணறு மட்டுமல்ல இன்னும் பல ஆபத்துகள் குழந்தைகளுக்கு உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குழந்தைகள் நம்மை நம்பி தான் உள்ளனர். காலை முதல் மாலை வரை அவர்களை கண்காணிக்க வேண்டியது நமது கடமை. பெரியவர்களுக்கு என அரசில் பல்வேறு துறைகள் உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கென ஒரு துறை மட்டும் இருந்தால் போதாது. மருத்துவம், கல்வி, சமூக பாதுகாப்பு உள்ளிட்டவை அடங்கிய குழு தேவைப்படுகிறது. ஆகவே அவர்களை பாதுகாக்க மாநில அளவில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் என பல்துறை நிபுணர்கள், வல்லுநர்கள் அடங்கிய குழுவை உருவாக்குவது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை நடத்தினோம்.

அதனை முதல்வர் பொறுமையுடன் கேட்டு கொண்டார். இது தொடர்பாக விரைவில் அரசு நல்ல முடிவை எடுக்கும் என தெரிவித்தார். குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஹெல் லைன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குழந்தைகள் பாதுகாப்புக்கு இருந்தாலும் கூட மாநில அளவில் குழு அமைத்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது தற்போது அவசியம் ஆகியுள்ளது. குழந்தைகளுக்கு காலை முதல் மாலை வரை இது கிடைக்கின்றதா என்பது கேள்வி குறியாகவுள்ளது இதை ஒழுங்குபடுத்துவதற்கு சமூகம் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.