‘எங்களை பிரிக்க முடியாது’ ரஜினி நட்பு குறித்து கமல்ஹாசன் நெகிழ்ச்சி

சென்னை

சென்னை, நவ.8: என்னையும் ,ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் நடிகர் கமலஹாசன் கூறினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்த சிலை திறப்பு விழாவில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத்தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:- ரஜினியும், நானும் ஒருவருக்கு ஒருவர் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம்

நடனக்கலையில் ரஜினியின் பாணி வேறு, என்னுடைய பாணி வேறு, எங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கலாம் ஆனால் எங்கள் இருவருக்கும் நாங்கள் தான் முதல் ரசிகன்.நானும், ரஜினியும் ஒருவரை ஒருவர் விமர்சிப்போம், பாராட்டிக் கொள்வோம்.நானும், ரஜினியும் யார் என்பதில் நாங்கள் இருவருமே தெளிவாக இருக்கிறோம். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த படத்திற்கு தளபதி என்று பெயர் சூட்டப்பட்டது என்னிடம் தான் முதலில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விட்டு செல்லப்போவதாக ரஜினி கூறிய போது அதிர்ந்து போய்விட்டேன். சினிமாவை விட்டு போனால் நடப்பதே வேறு என்று நான் ரஜினியிடம் கூறினேன். ரஜினி சினிமாவை விட்டு சென்று இருந்தால் என்னையும் சினிமாவில் இருந்து அனுப்பி விடுவார்கள். என்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது. ரஜினி சினிமாவிற்கு வந்த முதல் வருடத்திலேயே ஐகான் ஆகிவிட்டார். மத்திய அரசின் விருதை பெறும் ரஜினிக்கு வாழ்த்து, விருது கொடுப்பவர்களுக்கு நன்றி.

44 ஆண்டுகள் தாமதமாக ரஜினிக்கு ஐகான் விருது கொடுத்திருக்கிறார்கள். ரஜனி எந்தனை வெற்றிப்படங்களை கொடுத்தாலும் அதில் எனக்கு பங்கு உண்டு. படம் வெற்றிபெற்றாலும் தோல்வி அடைந்தாலும் சகஜமாக பேசிக்கொள்வோம்.ரஜினிக்கும் எனக்கும் சிறந்து நட்பு உண்டு. எனது சினிமா அலுவலகத்திற்கு வரும் போது பாலச்சந்தர் என்னை கண்காணிப்பது போல் இருக்கட்டும் என்பதற்குத்தான் அவருக்கு சிலை. ராஜ்கமல் நிறுவனத்தின் 50வது படம்மிக பிரமாண்ட படம் அறிவிக்கப்பட உள்ளது. இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த், கமல், நாசர், மணிரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.