கமல் கே.பியின் செல்லபிள்ளை உலகநாயகன் குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினி பேச்சு

சென்னை

சென்னை, நவ.8: சென்னையில் நடந்த இயக்குநர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த். பல கலைஞர்களின் பிதாமகன் பாலசந்தர் என்றும், அவருக்கு மிகவும் பிடித்த குழந்தை கமல்ஹாசன் என்றும் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் சினிமா அலுவலகமான சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் தனது திரையுலகக் குருவான இயக்குநர் கே.பாலசந்தரின் மார்பளவு சிலையை ரஜினியுடன் இணைந்து கமல்ஹாசன் திறந்துவைத்தார்.

இந்த சிலை திறப்பு விழாவில், இயக்குநர் பாலசந்தர் குடும்பத்தினர், மணி ரத்னம், நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் ரஜினி கூறியதாவது: நேற்றும், இன்றும் கமலுக்கு மறக்க முடியாத நாட்கள். நேற்று கமல் தனது தந்தையின் சிலையை பரமக்குடியில் திறந்து வைத்தார். இன்று கமல் தனது கலையுலக தந்தையின் சிலையை திறந்து வைத்துள்ளார்.
இதன்மூலம், அரசியலுக்கு வந்த பிறகும் தாய்வீடான சினிமாவை கமல் மறக்கமாட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் எடுத்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அபூர்வ சகோதரர்கள்.

இந்த படம் பார்த்து அன்று நள்ளிரவே கமல் வீட்டுக்கு நேரில் சென்று அவரை சந்தித்து பாராட்டினேன். ராஜ்கமல் பிலிம்ஸ் எடுத்த தேவர்மகன் திரைப்படம் ஒரு மிகப்பெரிய காவியம்.
நான் குறிப்பிட்ட மூன்று படங்களை அடிக்கடி விரும்பி பார்ப்பேன். மார்லன் பிராண்டோவின் காட் ஃபாதர், சிவாஜியின் திருவிளையாடல் மற்றும் கமலின் ஹேராம். இவற்றில் ஹேராம் திரைப்படத்தை மட்டும் இதுவரை 30 முதல் 40 முறை பார்த்து உள்ளேன். பல கலைஞர்களின் பிதாமகன் இயக்குநர் பாலசந்தர். அவருக்கு மிகவும் பிடித்தமான குழந்தை கமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்தில் கமல் தூங்குவதை கூட பாலசந்தர் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார், என்றார்.

முன்னதாக , விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து கூறுகையில், இந்தியாவின் கலை அடையாளங்கள் ரஜினி, கமல். அவர்களை திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குநர் பாலச்சந்தர். அவர் வெறும் இயக்குனர் மட்டும் இல்லை, தமிழ் மொழியின் மேதையாக இருந்தவர். ரஜினி, கமலை பற்றித்தான் பாலசந்தர் அதிகநேரம் பேசிக் கொண்டு இருப்பார் என்று வைரமுத்து கூறினார்.
பாலச்சந்தர் படங்களை பார்த்த பிறகு தான் சினிமா எடுக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது என்றும், பாலச்சந்தரிடம் நான் வேலை செய்யாத சிஷ்யன் என்றும் இயக்குநர் மணிரத்னம் நெகிழ்ச்சி தெரிவித்தார்.