சென்னை, நவ.8: வைகை அணையை 9-ந் தேதி முதல் பாசனத்திற்கு திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் 1,36,109 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இது குறித்து முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வைகை அணையிலிருந்துத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப்பகுதி 3-க்கு 9.11.2019 முதல் 16.11.2019 வரை உள்ள 7 நாட்களுக்கு 1441 மில்லியன் கன அடியும், வைகை பூர்வீக பாசனப்பகுதி 2-க்கு 17.11.2019 முதல் 21.11.2019 வரை 4 நாட்களுக்கு 386 மில்லியன் கன அடியும், 22.11.2019 முதல் 25.11.2019 வரை மூன்று நாட்களுக்கு 48 மி.க.அடியும் பகுதி 1-யை சார்ந்த நான்கு கண்மாய்களுக்கு, விரகனூர் மதகணையில் வழங்கவும் மற்றும் வைகை பூர்வீகபாசனப்பகுதி மி-க்கு 26.11.2019 முதல் 2.12.2019 வரை 240 மில்லியன் கனஅடி தண்ணீரை வைகை அணையிலிருந்து திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,36,109 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.