சென்னை, நவ.8: தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டி விட்டது. இதையொட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அரசு விருது வழங்கியது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வேளாண் அமைச்சர் ஆர். துரைகண்ணு காண்பித்து ஆசி பெற்றார். இதையொட்டி தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசால் வகுக்கப்பட்ட பல புதிய சீரிய கொள்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளதோடு, வேளாண் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

சில முக்கிய வேளாண்மைத் துறை திட்டங்கள்:- கூட்டுப் பண்ணைய முறை, ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணையம், 100 சதவீத மானியத்துடனான நுண்ணீர்ப் பாசனம், உழவன் கைபேசி செயலி, நீடித்த நிலையான மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம், இயந்திரங்கள் வாடகை மையங்கள், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்தல், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், காய்கறி மற்றும் பழங்களுக்கான வினியோக தொடர் மேலாண்மை திட்டம், தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை, தமிழ்நாடு வேளாண் விளைபொருள்கள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் செயலிகள் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல் சட்டம் 2019).

மேற்காணும் சீரிய முயற்சிகளின் விளைவாக, 100 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் கூடுதலாக உணவு உற்பத்தி எட்டப்பட்டுள்ளது. இத்தகைய சீரிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், 2019-ஆம் ஆண்டிற்கான உலக வேளாண் விருதின் கீழ் சிறந்த வேளாண் மாநிலத்திற்கான விருதிற்காக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுடில்லியில் 5.11.2019 அன்று நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் க. சண்முகம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சீங் பேடி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.