திருச்சி,நவ.8: திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 70 வெளிநாட்டு கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை 20 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். அவர்கள். அனை வரையும் திருச்சி அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை செய்யக்கோரி, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் வெளிநாடுகளைச் சேர்ந்த 46 கைதிகள் நேற்று முதல் உண்ணாவிரத்தை துவக்கியுள்ளனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் முகாம் சிறை உள்ளது. இந்த முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் 37 பேர், வங்கதேசம் 30 பேர், சீனா 1, பல்கேரியா 1, ரஷ்யா 1, தென்னாப்பிரிக்கா 1, ஜெர்மன் 1 என மொத்தம் 72 பேர் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப் பட்டுள்ளனர். இதற்கிடையில் தங்கள் மீதான வழக்கை விரைந்து முடித்து சொந்த நாட்டுக்கு அனுப்ப கோரி 22 இலங்கை தமிழர், 22 வங்கதேசம், 1 சீனா, 1 பல்கேரியா ஆகிய நாட்டை சேர்ந்த 46 பேர் நேற்று முதல் முகாம் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இதையறிந்த சிறப்பு முகாம் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் நள்ளிரவும் தொடர்ந்ததால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த 70 வெளிநாட்டு கைதிகளில் 20 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தண்டனை முடிந்தும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால் முகாமில் இருந்து விடுவிக்கக்கோரி தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் மட்டும் அவ்வப்போது போராட்டம் நடத்தி வரும் நிலையில் பிற வெளிநாட்டினரும் தற்போது போராட்டம் நடத்தி வருவது அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.