புதுடெல்லி, நவ. 8: அயோத்தி வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட இருப்பதையொட்டி இன்று உபி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்து மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய் முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். அயோத்தி வழக்கில் அடுத்தவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் அயோத்தி நகரில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகிறார்கள். எட்டு இடங்களில் தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வரும் 13-ம் தேதி வாக்கில் மத உணர்வுமிக்க அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது. சர்ச்சைக்கு உரிய 2.3 ஏக்கர் நிலம் எந்த அமைப்புக்கு சொந்தமானது என்பதை தீர்ப்பு தெளிவுப்படுத்தும். தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என முஸ்லீம் மத அமைப்புக்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் இந்து மத அமைப்புகளும் தீர்ப்பு சாதகமாக இருந்தால் வெற்றி விழாவோ, பாதகமாக இருந்தால் ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டோம் என தெரிவித்துள்ளனர். இருப்பினும் அயோத்தி நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தரப்பில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் கூட தள்ளிப்போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டப்படி நடத்தலாம் என மாவட்ட நிர்வாம் அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீசாருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீர்ப்பு தொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது ஆலோசனையை இன்று தொடங்கியுள்ளார். தனது அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகளிடம் ஆலோசனையை முடித்தபிறகு உத்திரபிரதேச தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.