ரூ.25 கோடியில் தொழிற் பயிற்சி கட்டிடங்கள்

சென்னை

சென்னை, நவ,8: விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம், நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட இடங்களில் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் 5 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திண்டிவனத்தில் 4 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள் மற்றும் பயிற்சியாளர் விடுதிக் கட்டடங்கள், மேலும், நீலகிரி மாவட்டம், கூடலூரில் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மின்பணியாள் மற்றும் பொருத்துநர் தொழிற் பிரிவுகளுக்கான வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டடங்கள், கடலூர் மாவட்டம், கடலூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டெக்னீசியன் பவர் எலக்ட்ரானிக்ஸ் தொழிற் பிரிவிற்கான வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டடங்கள், திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இயந்திர வேலையாள் தொழிற் பிரிவிற்கான வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டடங்கள், வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆப்ரேட்டர் அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ் தொழிற் பிரிவிற்கான வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டடங்கள், சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏசி மெக்கானிக் தொழிற் பிரிவிற்கான வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டடங்கள் என மொத்தம் 25 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலர் அலுவலக வளாகங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.