தோழி திட்டம்: கமிஷனர் தொடங்கி வைத்தார்

சென்னை

சென்னை, நவ.8: பாலியல் வன்புணர்வுக்கு ஆளான குழந்தைகள், பெண்களுக்கு உளவியல் ரீதியில் ஆலோசனைகளை வழங்கி மனநலம் பேணுவதற்காக, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் ‘தோழி’ என்ற புதிய திட்டத்தை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் இதன் தொடக்க விழா நடைபெற்றது. இத்திட்டத்திற்காக, சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் இருந்து தலா 2 பெண் காவலர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 70 பெண் போலீசாருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

மனநல மருத்துவர் ஷாலினி, லயோலா கல்லூரி பேராசிரியர் ஆன்ட்ரூ ஜேசுராஜ் ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் பேசிய கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், தோழி திட்டம் போக்சோ சட்டத்தின் கீழ் உருவாக்கப்படது. பாலியல் குற்றங்கள் நடந்த பின் குழந்தைகள், பெண்களுக்கு மனம் மற்றும் உளவியல் ரீதியிலான ஆலோசனைகள் வழங்க, ஒவ்வொரு மகளிர் காவல் நிலையத்தில் இருந்து இரண்டு பெண் காவலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், பாதிக்கபட்டவர்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவார்கள். ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குழந்தையின் வாழ்க்கையும் பெண் காவலர்கள் கையில் உள்ளது. தோழி திட்டத்தை பெண் காவலர்கள் சிறப்பாக செய்ய வேண்டும். கடந்த ஜூன் மாதம் முதல் போக்சோ சட்டத்தின்கீழ், 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்ட 2012-ம் ஆண்டுமுதல் 1,039 வழக்குகள் பதிவாகியுள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மண்டல் காவல் போலீஸ் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.