திருச்சி,நவ. 8: திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த காவலர் உடல் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு குழுமம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு உடல்தகுதி தேர்வு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று நடந்த தேர்வின்போது, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேள்வி மங்கலத்தை சேர்ந்த சிந்தனை வளவன் (வயது 23) என்ற வாலி பருடைய தேர்வுக்கான அனுமதிச் சீட்டை போலீசார் சரிபார்த்தபோது எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றொரு வாலிபரின் தேர்வு அனுமதிச்சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் தனது போட்டோவை ஒட்டி தேர்வுக்கு வந்து ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிந்தனைவளவனை பிடித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.