சென்னை, நவ.8: மிசா கைதியாக இருந்த மு.க.ஸ்டாலினை சிறையில் காப்பாற்றி உயிரிழந்த சிட்டிபாபு குடும்பத்திற்கு திமுக செய்த கைமாறு என்ன என்று முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் கேள்வி விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக தலைவர் ஸ்டாலின் மிசா கைது பற்றி சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. அவசர நிலை காலத்தில் ஸ்டாலினும் எல்லாத் தலைவர்களைப்போல் கைது செய்யப்பட்டார்.

அவரை சென்னை மத்திய சிறைச்சாலையில் சிறைக் காவலர்கள் கடுமையாக தாக்கிய போது முன்னாள் மேயர் சிட்டிபாபு அவரை பாதுகாத்து ஸ்டாலின் மீது நடத்திய தாக்குதலை எல்லாம் தான் வாங்கி கொண்டு அவர் உயிரை காப்பாற்றினா இந்த தாக்குதலால் தான் சிட்டிபாபு பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் சிட்டிபாபு தான் என் மகன் ஸ்டாலின் காப்பாற்றினார் என்று பல முறை கலைஞரே மேடைகள்ல பேசியிருக்கிறார்.

ஸ்டாலின் உயிரை காப்பாற்றிய சிட்டிபாபு குடும்பத்தாருக்கு ஸ்டாலின் செய்த கைமாறு என்ன? காலஞ்சென்ற சிட்டிபாபுவின் மூத்த மகன் சேகர் ஒவ்வொரு முறையும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்ட போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. கடைசியில் அலுத்துப் போய் திமுகவே வேண்டாம் என்று அமெரிக்காவிற்கு போய்விட்டார் சேகர். சிட்டிபாபுவின் இளைய மகன் சுகுமாரை, ஸ்டாலின் 1996-2001 வரை மேயராக இருந்த போது தனக்கு உதவியாளராக வைத்துக்கொண்டார். அவ்வளவே பிறகு ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது சுகுமாரை பணிமாற்றம் அடிப்படையில் தனது உதவியாளராக வைத்துக் கொண்டார் அவ்வளவுதான்.

ஆனால் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பரிந்துரையின் பேரில், சிட்டிபாபு மகன் சுகுமாருக்கு சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அடுத்த உயர் பதவியான வருவாய்துறை அதிகாரி வழங்கி பேரறிஞர் அண்ணாவின் மாற்றாந் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்ற கொள்கையை நிலை நிறுத்தி இருக்கிறது எடப்பாடி அரசு.
சிட்டிபாபு மூத்த மகன் சேகர் என் கல்லூரித் தோழர் அவரது குடும்பத்தை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். பாரம்பரியமிக்க திராவிட குடும்பத்தின் இன்றைய நிலை என்னை வருத்தப்பட செய்து இந்த அறிக்கை வெளியிட கட்டாயத்திற்கு தள்ளிவிட்டத்தில் உண்மையில் வருந்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.