சென்னை, நவ.8: ராயபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர், நேற்று அடையாறுக்கு சொந்த வேலையாக சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். பட்டினப்பாக்கம் கேனால் பேங்க் ரோடு அருகே நேற்றிரவு வந்துக்கொண்டிருந்தபோது, இவரது பைக் மீது கோட்டூர்புரம் போலீஸ் உதவி கமிஷனர் வாகனம் மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த சுரேஷ் படுகாயமடைந்தார்.

இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சுரேஷை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். போலீஸ் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர் வீரமணி மீது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், காயம் விளைவித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.