மொஹாலி, நவ.8: ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டி தொடங்கும்முன்னும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு (பிசிசிஐ) கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா, பிசிசிஐ-க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது அந்தந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். இதே போல, ஐபிஎல் தொடரிலும் போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கும் முறையை கொண்டு வரவேண்டும் என்று நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ-க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: செலவைக் குறைப்பதற்காக ஐபிஎல் தொடக்க விழாவை நிறுத்தியது சரியான நடவடிக்கை. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அதேபோல் கால்பந்து லீக்கிலும், புரோ கபடியிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி ஏற்கனவே கடிதம் எழுதி இருப்பதாகவும், தற்போது சவுரவ் கங்குலி தலைவராக உள்ளதால் அவருக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் நெஸ் வாடியா கூறியுள்ளார்.