ராஜ்கோட், நவ.8: இந்தியாவுக்காக 100-வது டி20 போட்டியில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று ரோஹித் சர்மா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையிலான டி20 போட்டி நடைபெற்றுவருகிறது. முதல் போட்டியில் வெற்றிபெற்று வங்கதேசம் அணி முன்னிலையுடன் இருந்த நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான ரோஹித் அதிரடி காட்ட, 15.4 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்த அசத்தல் வெற்றி குறித்து ரோஹித் கூறுகையில், நான் இத்தனை ஆட்டங்கள் ஆடுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. எனது கிரிக்கெட் வாழ்வில் நீண்ட பயணமாக உள்ளது. 12 ஆண்டுகளில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்தேன். அனுபவத்தின் அடிப்படையில் எனது ஆட்டத்தை புரிந்து கொண்டேன். கடந்த 2007-ல் இங்கிலாந்துக்கு எதிராக டர்பனில் நடந்த முதல் டி20 உலகக் கோப்பை போட்டியில் அறிமுகம் ஆனேன். இந்தியாவுக்காக 100-வது டி20 ஆட்டத்தில் ஆடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.