‘இந்திய அணியின் சொத்து ரோஹித்’: சவுரவ் கங்குலி புகழாரம்

விளையாட்டு

மும்பை, நவ.8: இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா, இந்திய அணிக்கு கிடைத்த சொத்து என்று பிசிசிஐ தலைவர் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடிவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற வங்கதேச அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்க 2-வது போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இது 100-வது சர்வதேச டி20 போட்டியாகும். இதன்மூலம், 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார். இந்த சாதனையுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாத ரோஹித், நேற்றைய போட்டியில் அதிரடிகாட்டி பிரமிப்பூட்டினார். 43 பந்துகளில் 85 ரன்கள் (6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உட்பட) விளாசி அசத்தினார்.

இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், 100-வது டி20 போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். மேலும் அந்தப் பதிவில், ரோஹித் சர்மா இந்திய அணிக்கு கிடைத்த சொத்து என்று குறிப்பிட்டு புகழ்ந்துள்ளார்.