திருச்சி, நவ. 9: திருச்சியில் பெண் போலீஸ் தற்கொலை செய்ய முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பர்சிலின்பானு (வயது 19). இவர் கடந்த ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வரும் இவர், திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் காலை பர்சிலின்பானு வீட்டில் எலிமருந்தை (பேஸ்ட்) சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதைக்கண்டு அவருடன் தங்கியுள்ள மற்றொரு பெண் போலீஸ் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பர்சிலின்பானுவை மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.