ஒற்றுமைக்கு வழிவகுக்கும் தீர்ப்பு: தலைவர்கள் கருத்து

சென்னை

சென்னை, நவ. 9:இந்திய இறையாண்மைக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் 5 நீதிபதிகளும் இணைந்து ஒருமித்த குரலாக அளித்துள்ள இந்த தீர்ப்பு வரவேற்கதக்கது என்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக தலைவர்கள் தங்களது கருத் துக்களை தெரிவித்துள்ளனர்.
கே,எஸ். அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கை யில்,அயோத்தி வழக்கினுடைய தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா வைப் பொறுத்தவரை நாம் மிக உயர்ந்த அமைப்பாக கருதுவது இந்திய அரசமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றமும் தான். தற்போது உச்சநீதிமன்றம் நூறு ஆண்டுகால பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டிருக்கிறது. அந்த தீர்வை தமிழக காங்கிரஸ் கட்சி தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது.

ஜி,கே.வாசன்
தமாகா தலைவர் ஜிகே.வாசன் கூறுகை யில், இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஏற்கனவே ஒற்றுமையாக இருப்பதை வலுப்படுத்தும் விதமாக இத்தீர்ப்பானது தொடர்ந்து இந்துக்களும், இஸ்லாமியர்களும் தங்களுக்குள் ஒற்றுமையாக வாழ்வதற்கு வழி வகுத்து தந்திருக்கிறது. எனவே அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை த.மா.கா சார்பில் வரவேற்கிறது.

திருமாவளவன்
பாபர் மசூதி வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்தனது அறிக்கையில், அயோத்தி வழக்கில்உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, தீர்ப்பாக மட்டுமே கருதி இந்த நேரத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்தியர் என்ற உணர்வோடு, அடுத்தவருக்குப் பாதிப்பில்லாமல் அவரவர் நம்பிக்கை யைப் போற்றியபடி, தொடர்ந்து ஒற்றுமையுடன் திகழ்ந்திடுவோம்.

டாக்டர், சேதுராமன்
இரு மதங்களின் இறை நம்பிக்கையையும் மதித்து 5 நீதிபதிகள் ஒருமித்த குரலாக தீர்ப்பினை வழங்கி உள்ளார்கள். நீதிபதிகளுக்கு நன்றி என்று இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவத்தலைவர் சேதுராமன் கூறியுள்ளார்

இந்து மகா சபை
இந்து மகாசபை வழக்கறிஞர் வருண் குமார் சின்ஹா கூறுகையில், இது சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று தீர்ப்பு. இதனால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற செய்தியை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது என கூறினார்.

சுப்பிரமணியசுவாமி
தனக்கு கோயில் எப்போது கட்ட வேண்டும் என்று ராமர் விரும்புகிறாரோ அப்போது தான் அதற்கான பச்சை சிக்னல் கிடைத்திருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

சரத்குமார்
சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத ரீதியாவும், மன ரீதியாகவும் ஒற்றுமையை வளர்க்கும் நல்ல தீர்ப்பு என்று கூறியுள்ளார்.