புதுடெல்லி, நவ.9: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரதமர் மோடியின் டிவிட்டர் பதிவில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ அல்ல. நாட்டுமக்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு, அமைதிக்கும், ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நமது பாரம்பரியமான ஒற்றுமையையும், நல்லெண்ணத்தையும் அனைவரும் நிலைநாட்ட வேண்டும்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி: சாதி மத பூசல்கள் இன்றி அனைத்து மக்களும் மதநல்லிணக்கத்தை பேணி தமிழ்நாடு அரசு அமைதி பூங்காவாக பராமரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு இடம் கொடுக்காமல் தமிழ்நாட்டை அமைதிப்பூங்காவாக திகழ செய்து இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அனைத்து மத தலைவர்கள், கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

மோகன் பகாவத் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்): அயோத்தி வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து, அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மோகன் பகாவத் இன்று உடனடியாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிஜேபி செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். நவின் பட்நாயக் (பஞ்சாப் முதல்வர்): அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கௌரவமிக்க உச்சநீதிமன்றத்தை மதித்து மதசார்பின்மையை, சகோதரத்துவ உணர்வுடன் கட்டிக்காக்க வேண்டும்.

அமரிந்தர் சிங் (பஞ்சாப் முதல்வர்): சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எல்லா இடங்களிலும் அதிகாரிகள் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன். சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம் தலைவர்): உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்து மக்களும் மதிக்க வேண்டும். மத உணர்வுகளை இந்த சமயத்தில் வெளிப்படுத்த கூடாது. ஒற்றுமையுடன் இருந்து அமைதி காக்க வேண்டும்.

நிதிஷ்குமார் (பீகார் முதல்வர்): உச்சநீதிமன்ற தீர்ப்பை ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும். பாதகமான சூழ்நிலையை யாரும் உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
திரிவேந்தர் சிங் ரவாட் (உத்தரகாண்ட் முதல்வர்): அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க வேண்டும். எந்த விதத்திலும் வதந்திகளை பரப்புவதோ, தீர்ப்பை விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிடவோ கூடாது. இவ்வாறு தலைவர்கள் கூறியுள்ளனர்.