புதுடெல்லி, நவ.9: அயோத்தியில் ராமர் பிறந்ததாக கருதப்படும் இடம் பற்றிய பிரச்சனை 6-ம் நுற்றாண்டு காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. மாமன்னர் பாபரின் ஆணைக்கு இணங்க அவரது தளபதியால் இங்கு 1528-ல் பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும், இதற்கு ஆதாரமாக கல்வெட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மறுத்து 1949 டிசம்பர் 2-ம் தேதி இரவில் பாபர் மசூதிக்குள் ராமர், லட்சுமணர் சிலைகள் வைக்கப்பட்டன. பின்னர் நீதிமன்ற உத்தரவுகள் விளைவாக மசூதி வாசல் மூடப்பட்டது.

இந்த பிரச்சனை 1980-ம் ஆண்டுகளில் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. 1984-ல் அயோத்தி பிரச்சனை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போதய பிரதமர் ராஜிவ் காந்தி இதில் தீர்வு காண முயற்சி செய்தார். 1992 டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கலவரங்கள் நடைபெற்றன. நாடுதழுவிய அளவில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர்.
1993-ல் சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கையப்படுத்த சட்டம் இயற்றப்பட்டது. 2001-ல் ராமர் கோவில் கட்டியே தீர்வோம் என விஎச்பி அமைப்பு மீண்டும் உறுதிமொழி எடுத்தது.

2002-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அதிகாரி தலைமையில் சமரச குழு அமைத்து இந்து, முஸ்ஸீம் தலைவர்களுடன் பேச்சு நடத்த ஏற்பாடு செய்தார். இதன் பின்னர் கோத்ராவில் இருந்து கரசேவகர்கள் சென்ற ரெயில் தீ வைக்கப்பட்டதில் 58 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து குஜராத்தில் பெரும் கலவரம் மூண்டது. 2003-ல் நீதிமன்ற ஆணைப்படி ராமர் கோவில் இருந்ததா என்பதை கண்டறிய தொல்லியல் துறை ஆய்வு நடத்தியது. இதில் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருந்ததாக கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து பாபர் மசூதி தொடர் பான வழக்குகள் விஸ்பரூபம் எடுத்தன.

2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று சமபங்காக பிரித்து சன்னி வக்பு வாரியம் நிர்மோகி அகாரா, ராம் லைல்லா ஆகிய அமைப்புகளுக்கு வழங்கி தீர்ப்பு அளித்தது. 2016-ல் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2017 ஆகஸ்ட்டில் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்டு அமர்வு நியமிக்கப்பட்டது. 2018 பிப்ரவரியில் மேல்முறையீட்டு மனுக்கள் எதிரான விசாரணை தொடங்கியது.

2019 ஜனவரியில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. 2019 பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் சமரச குழு அமைத்து பேச்சு வார்த்தை நடத்துமாறு உத்தரவிட்டது. இந்த முயற்சி தோல்வி அடைந்ததாக கடந்த ஆகஸ்ட் 2-ல் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.