சென்னை, ஏப்.12:இரண்டாவது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கும்போது ஓஎம்ஆரில் எந்த போக்குவரத்து பாதிப்பும் ஏற்படாது என்று மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தப் பணிகள் நடக்கும்போது டைடல் பார்க் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான சர்வீஸ் சாலை போக்கு வரத்துக்கு திறந்துவிடப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் முதல் திட்டப்பணி 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. 2-வது திட்டப்பணி இந்த ஆண்டு இறுதியில் தொடங்குவதாக உள்ளது. மாதவரம் முதல் சிப்காட் வரை, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை ஆகிய 3 புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதில் மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரை 52 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ள ரெயில் பாதை பெரம்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி மற்றும் அடையாறை இணைப்பதாக இருக்கும்.
இது தவிர மாதவரம் முதல் சிஎம்பிடி வரையிலான பாதை கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் வழியாகவும் செல்லும்.
சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் மத்திய கைலாசில் இருந்து ராஜீவ்காந்தி சாலை மற்றும் ஓஎம்ஆர் வழித்தடத்தில் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டப்பணிகள் தொடங்கும் போது மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக போக்குவரத்து துறையுடன் மெட்ரோ நிர்வாகம் கலந்து ஆலோசித்து வருகிறது.

வரும் ஜூன் மாதத்தில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் போது போக்குவரத்து பற்றிய ஆய்வு இறுதி படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.ஓஎம்ஆர் சாலை ஏற்கனவே 6 வழிச்சாலையாக உள்ளது. இதன் நடுவே 10 மீட்டர் அகலத்தில் தான் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஓஎம்ஆரில் சுரங்கப்பாதை அமைக்கப்படும்போது இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் டைடல் பார்க் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 52 கிலோ மீட்டர் தொலைவு சர்வீஸ் சாலையை போக்குவரத்துக்கு திறந்துவிட முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மெட்ரோ ரெயில் முதல் கட்டப்பணி யின்போது அண்ணாநகர், 100 அடி சாலை, அண்ணாசாலை, எல்ஐசி, ஆயிரம்விளக்கு பகுதிகளில்
சாலைகளின் நடுவே அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து தடை பட்டது. அதுபோன்ற நிலைமை 2-வது கட்ட பணியில் ஏற்படுவதை தவிர்க்க மெட்ரோ நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.