செங்குன்றம், நவ. 11: செங்குன்றத்தில் நண்பரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆட்டோ டிரைவரை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சோழவரம் காவல் எல்லைக்குட்பட்ட நல்லூர் சோலையம்மன் நகர் 8-வது தெருவில் வசித்த ஆட்டோ டிரைவர் எமகோஸ் (வயது30) உடல்நலக்குறைவால் இறந்து விட்டார், அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட புழல் கண்ணப்ப சாமிநகர் ஆட்டோ டிரைவர் யோகேஷ் (வயது 24) என்பவரை 3 பைக்கில் வந்த 6பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதனையடுத்து தகவலறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யோகேஷை சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சோழவரம் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.