சென்னை, நவ. 11: கள்ளக்குறிச்சி அருகே வாகன சோதனையின் போது மூதாட்டியை தாக்கி கொன்ற காவலர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாமக நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்றகியல் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகம்காத்தான் காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற இளைஞர் அவரது தாயார் அய்யம்மாள் என்பருடன் நேற்று இரு சக்கர ஊர்தியில் கள்ளக்குறிச்சிக்கு பயணித்துள்ளார். கள்ளக்குறிச்சி மிளகாய்த் தோட்டம் பகுதியில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

செந்தில் வந்த இரு சக்கர ஊர்தியை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போது, அவர் வாகனத்தை நிறுத்த தாமதம் ஆனதால் அவர் தப்பித்து செல்வதாக நினைத்த சந்தோஷ் என்ற காவலர், தமது கையில் இருந்த லத்தியால் செந்திலை ஓங்கி தாக்கியுள்ளார். லத்தி அடியிலிருந்து தப்பிப்பதற்காக செந்தில் தலையை குனிந்து கொள்ள, அந்த லத்தி அடி செந்திலின் தாயார் அய்யம்மாள் மீது விழுந்துள்ளது. அதனால் காயமடைந்து உயிருக்குப் போராடிய அய்யம்மாள் அங்கேயே உயிரிழந்தார். காவல்துறையினரின் அத்துமீறலால் அப்பாவி மூதாட்டி உயிரிழந்து விட்ட நிலையில், மனசாட்சியே இல்லாமல் இளைஞர் செந்தில் மது அருந்தி விட்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தபோது, போதையில் தமது தாயை வாகனத்திலிருந்து தள்ளி விட்டதால் அவர் உயிரிழந்து விட்டதாக பொய்யான வழக்கை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினரின் இந்த செயல் எந்த வகையிலும் மன்னிக்க முடியாதது; இது கொலைக்குற்றத்திற்கு சமமான செயல் ஆகும்.தவறு செய்த காவலர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 304-ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.