சென்னை, நவ.11: திமுகவில் கோஷ்டி பூசலால் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும், இந்நிலை நீடித்தால் கட்சி நலனுக்காக சர்வாதியாரியாக கூட மாறுவேன் என்று பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பேசினார். பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலிவு காரணமாக செயல்பட முடியாத நிலையில் இருப்பதால் அவரது அதிகாரங்களை மு..க.ஸ்டாலினுக்கு கூடுதலாக வழங்க பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. திமுகவின் பொதுக்குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். பொருளாளார் துரைமுருகன், முதன்மைச் செயலாளார் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுக்குழுவில் முக்கிய நிர்வாகிகள் 10 பேர் பேச அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தங்கள் மாவட்டங்களில் கோஷ்டிப் பூசல் இருப் பதாகவும், அவற்றை களைந் தால்தான் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று பேசினார்.
பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலமின்மையால் கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தையும் மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவதற்கான சட்டத்திருத்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிப்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் 2 தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் தோல்வியை சாதாரணமாக கருதிவிட முடியாது என்றும், கோஷ்டி பூசல்களே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.

கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்படாவிட்டால் சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவது ஒரு சவாலாக இருக்கும் என்றும், திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் தீட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். இவை எல்லாவற்றையும் தாண்டி திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் கட்சி நலனுக்காக சர்வாதிகாரியாக கூட மாறுவேன் என்றும் அவர் பேசினார்.