சென்னை, நவ.12: சென்னை விமான நிலையத்தை அனுமதியின்றி புகைப்படம் எடுத்த வெளிநாட்டு புகைப்பட கலைஞர்கள் 3 பேரை பிடித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி இன்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். இதற்காக, சென்னை விமான நிலையத்தின் 3-வது நுழைவுவாயிலில் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, 3 வெளிநாட்டு நபர்கள் வீடியோ கேமரா, செல்போன் ஆகியவற்றை கொண்டு விமான நிலைய பகுதியை சுற்றி சுற்றி படம் எடுத்துக்கொண்டிருந்ததை கவனித்து, அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் தனியார் கன்செல்டன்சி நிறுவத்தை சேர்ந்தவர்கள் என்றும், உரிய அனுமதி பெறாமல் புகைப்படம் எடுத்ததும் கண்டறியப்பட்டது. பின்னர், போலீசாரின் நீண்ட நேர விசாரணைக்கு பிறகு, அவர்கள் 3 பேரும் எச்சரித்து அனுப்பிவைக்கப்பட்டனர்.