இந்தூர், நவ.14: இந்தூரில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ்வென்று முதல் பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்திய பவுலர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 150 ரன்களுக்குள் சுருண்டது.

இந்தியாவுக்கு வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதல்முறையாக கேப்டன் பொறுப்பேற்றுள்ள வங்கதேச கேப்டன் மோமினுள் ஹக், டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.

அதன்படி முதல் பேட்டிங் செய்த வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இஸ்லாம், இம்ரூல் தலா 6 ரன்களுடன் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க, சிறிது நேரத்திலேயே மற்றொரு வீரர் மிதுனும் அவுட்டாக, வங்கதேச அணி 17 ஓவர்களுக்குள்ளேயே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
மதிய உணவு இடைவேளையின்போது, வங்கதேச அணி 26 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மோமினுள் ஹக் (37), முஷ்பிகூர் ரஹீம் (34) ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து நிலையாக விளையாடினார். முஷ்பிகூர் ரஹீமும் 43 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன்மூலம், 58.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த வங்கதேச அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இந்திய தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், இஷாந்த், அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆடுகளம் எப்படி?
இந்தூர்ஆடுகளத்தில் லேசான அளவுக்கு புற்களும், பிளவுகளும் இருப்பதால், முதல்நாளில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். ஆனால், 2-வது நாளில் பிற்பகுதிக்குப்பின் ஆடுகளத்தின் தன்மை மாறத் தொடங்கி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், இரவுநேர பனிப்பொழிவின் காரணமாக பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.