துபாய், நவ.14:  பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பூரனுக்கு நான்கு டி-20 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் நிக்கோலஸ் பூரன். இவர் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் பங்கேற்றிருந்தார். கடந்த திங்கள்கிழமை நடந்த 3-வது ஒருநாள் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக இவர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து களநடுவர்கள், 3-வது நடுவரிடம் புகார் தெரிவித்தனர். விசாரணையில், பூரன் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நான்கு டி-20 போட்டிகளில் விளையாட அவருக்குத் தடை விதித்துள்ளது. இதுகுறித்து பூரண் கூறுகையில், இதற்காக எனது சக வீரர்களிடமும், ஆதரவாளர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், என்றார்.