கோவை, நவ.14: கோவையில் நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து மாணவர்கள் சிலர் மது அருந்திய போது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் நான்கு பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒரு மாணவர் மட்டும் காயங்களுடன் தப்பினர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த பீர் முகமது என்பவரின் மகன் சித்திக் ராஜா (22). இவர், கோவை சூலூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துவந்தார். இவரின் நண்பர்கள் ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜசேகர் (22) மூன்றாம் ஆண்டு, தேனியைச் சேர்ந்த விஷ்வனேஷ் (22) ஆகியோர் அதே கல்லூரியில் படித்துவந்தனர்.

இதனிடையே, அதே கல்லூரியில் பொறியியல் பட்டம் படித்து முடித்திருந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி (22), கவுதம் (21) ஆகியோர் நடந்து முடிந்த தேர்வில் தோல்வி அடைந்தனர். இதையடுத்து, அந்தத் தேர்வை எழுதுவதற்காக கல்லூரிக்கு வந்திருந்தனர். தேர்வு முடிந்ததும் இந்த 5 பேரும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். பின்னர், அறைக்குச் சென்ற இவர்கள் மீண்டும் மது அருந்துவதற்காக ராவுத்தர் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளனர். டாஸ்மாக் கடையை மூடும் நேரம் என்பதால் மதுபாட்டில்களை வாங்கியவர்கள், அதேபகுதியில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது அந்த வழியாக கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. போதை தலைக்கேறிய நிலையில் இருந்த கல்லூரி மாணவர்கள் ரெயில் வருவதை கவனிக்கவில்லை. இதனால் அவர்கள் மீது ரெயில் மோதியது. ரெயில் வருவதைப் பார்த்த விஷ்வனேஷ் மட்டும் காயங்களுடன் தப்பிவிட்டார். மீதமிருந்த 4 பேர் மீது வேகமாக வந்த ரெயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்து வந்த ரெயில்வே போலீசார், உடல்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.